அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை, 16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் நல்லாட்சியில் கூட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறந்த செயற்பாடு இடம்பெறவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “பல வருடங்களாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை தருகின்றது.
இதேபோன்று ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் குடும்பங்கள் அவர்களுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
மேலும் அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை அரசாங்கம் தற்போது ஒத்துக் கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாட்சியில் கூட அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இடம்பெற வில்லை என்பது கவலை அளிக்கின்றது.
ஆகவே ஜனாதிபதிக்கு இவ்விடயத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.