கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது.
அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.
குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவும், அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, சீன நிறுவனத்தின் ஊழியர்களிடம் குறித்த பண்ணை தொடர்பில் ஊடகவியலாளர்களும், வருகை தந்திருந்தவர்களும் வினவினர்,
குறித்த பகுதியில் கடலட்டை பண்ணையினை அமைப்பதற்கு அப்பகுதி மீனவ சங்கமே அனுமதி அளித்ததாகவும், மாதாந்தம் 1 லட்சம் ரூபாய் பணம் குறித்த சங்கத்திற்கு வழங்க பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை குறித்த கடலட்டை பண்ணை பதிவு செய்யப்படவில்லை எனவும், கடல்தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே இங்கு பண்ணை அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதமளவில் குறித்த பண்ணையை அமைத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாம் சீன நிறுவனத்தில் பணி புரிவதாகவும், சீனர்கள் தற்போது இங்கு இல்லை எனவும் குறிப்பிட்ட அவர்கள், தாம் தற்போது பண்ணையில் கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், இதுவரை பண்ணையை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.