ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
மேலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே நிதி அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.