மலையகச் சிறுமியின் மரணம் குறித்த சம்பவத்தில் சிலரின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.
இதன்போது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மேலும் 3 பேருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் தொடர்பான தரவுகளையும், குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய முகவரின் வங்கி பணப்பரிமாற்ற விபரங்களையும் பொரளை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.