கருப்பு யூலை தினத்தை முன்னிட்டு கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை மீளப்பெறு, இஷாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும், எரிபொருள் விலையை அதிகரிக்காதே, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கு, ஏழைகளை வஞ்சிக்காதே, அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து முடிவு சொல், ஜனநாயக போராட்டங்களை நசுக்காதே, கொரோனாவை காட்டி பொய் வழக்கு போடாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தனர்.
மேலும் அவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.