சிறுபோக பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நோய் தாக்கத்தினால் கிளிநொச்சி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய செய்கை பண்ணப்பட்டு உள்ள பயிர்கள் இரண்டு மாதம் கடந்துள்ள நிலையில் பங்கஸ் நோய் மற்றும் பூச்சிகளின் நோய் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக பல விவசாயிகளின் பயிர்கள் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பயிர் செய்கையை, எம்மிடமிருந்த நகைகளை அடகு வைத்தும் அதிக வட்டிக்கு பணம் பெற்றும் மேற்கொண்டுள்ள நிலையில் இயற்கையும் எம்மை கைவிட்டு விட்டது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இதற்கு முற்பட்ட காலங்களில் பெற்ற கிருமிநாசினிகள், தற்போது பல மடங்கு அதிக விலை கொடுத்து பெற வேண்டி உள்ளதுடன் விவசாயத்துக்கான உரங்கள் பல ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்து, பயிர் செய்கை மேற்கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் தாக்கம் காரணமாக சிறுபோக அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சலில் பாரிய சரிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை உரிய அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்துள்ள போதிலும் எமக்கு எந்தவிதமான நட்டயீடும் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஆகவே இம்முறையாவது எமக்கு ஏதேனும் ஒரு வகையில் நட்டயீட்டைப் பெற்றுதருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.