சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரியும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் கொட்டகலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மலையக பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் ப்ரொடெக்ட் சங்கத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்துள்ள சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் போராட்டகாரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.
மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சிறுவர் மற்றும் சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்கள் பணி செய்யும் பகுதிகளில பல்வேறு துஷ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு பணிக்குச் சென்ற 16 வயதுடைய சிறுமி, இம்மாதம் 3ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.