பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மக்களை மோசமான நிலைமைக்கு கொண்டுச் சென்றுள்ளது. ஆகவே மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றாடம் கூலி தொழில் செய்யும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த காலத்தில் 5000 ரூபாய் 53 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இம்முறை 17 இலட்சம் பேருக்கே 2000 ரூபாய் வழங்க நேர்ந்துள்ளது.
மேலும், தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த 2000 ரூபாய் முறையாக அவர்களின் கைகளுக்கு கிடைப்பதில்லை. இது தொடர்பாக பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், நாட்டில் பொருட்களின் விலைவாசி ஆகாயத்தை தொடுகின்ற சூழ்நிலையில் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாகவும் விலைவாசி அதிகரிப்பு காரணமாகவும் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரும் காலங்களில் இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.