மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 226 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மேலும் 199 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரத்து 601 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், பொதுமக்கள் முதலில் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதுடன் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.