கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
குறித்த மயானத்தை அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை கிளிநொச்சியிலுள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கைக்கு புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்திய கலாநிதி மு.சிறீதர், அதிபர்கள், ஆசிரியர்கள், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .
இதன்போது, மின்தகன மயானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
குறித்த குழுவில் தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜாவும் செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தனும் பொருளாளராக அதிபர் விக்கினராஜாவும் உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேலும் உபசெயலாளராக ரவியும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு.சிறீதர், கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.