மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதலாவது அமர்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் நாம் முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றோம்.
மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது. வேகமாக வளர்ச்சியடையும் மக்கள் தொகைக்கு ஆதரவளிக்க பொருளாதார பிரச்சினைகள் குறித்த முன்னேற்றம் அவசியமான போதிலும், நிலவும் சூழலில் அது முடியாததொரு விடயமாகும்.
நல்லிணக்கம் என்பது நம் காலத்தின் முக்கியமான தேவையாகும். மோதல்களும் நம்மைச் சுற்றி அதிகரித்து வரும் இடையூறுகளும் பொதுவானவை.
எங்களுடன் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுகிறது.
வெறுப்பை வெறுப்பால் அல்ல அன்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்றே நம் மதம் நமக்கு போதிக்கிறது.
கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
நாம் சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அற்புதமான புதிய எல்லையை அடையலாம்.
ஐரோப்பாவின் பழமையான கற்றல் மையமான போலோக்னாவில் நடைபெறும் இந்த உற்சாகமூட்டும் மாநாடு அதற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.