இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்கு இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின், பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வாரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்காக இராஜாங்க அமைச்சருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏனைய கட்சிக்காரர்களோ அல்லது இலங்கையிலுள்ள ஒரு சாதாரன பிரஜையோ சம்மந்தபட்டு இருந்திருந்தால், இந்த அரசு நீதிக்கு முன் நிறுத்தியிருக்கும்.
அதனடிப்படையில் இந்த இராஜாங்க அமைச்சரையும் கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தி, நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நிறுத்தினால்தான் இலங்கை அரசு சட்டம் என்கிற இறைமையை இலங்கையில் அமுல்படுத்துகின்றது என்பதற்கு சமனாகும். அப்படி இல்லாத பட்சத்தில் நீதி ஒரு பக்கசார்பாக செயற்படுகின்றனவா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆகவே இராஜங்க அமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை இலங்கை தொடர்பான சம்மந்தப்பட்ட விடயத்தில் கடந்த வாரம் ஒரு தெளிவான அறிக்கையை விடுத்து இருந்தது.
அதில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இனரீதியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு அறிக்கையூடாகவும் கடந்தகாலத்தில் முன்வைத்து இருந்தனர். சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள் கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டு இருக்கின்றது.
இலங்கையில் பயங்கரவாதத்தாலும் மனித உரிமை மீறலாலும் பாதிக்கப்பட்ட பல மனிதர்கள், புலம்பெயர்ந்த வேளையில் 25 நாடுகள் தமிழர்களுக்கு புகளிடம் கொடுத்தது சர்வதேசத்தின் மனித உரிமை ஆணையகத்திற்கான வெற்றி செயற்பாடாகும்.
தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் அறிக்கை மூலமாக ஐ.நாவில் தெரிவித்துள்ளனர்.
அந்த விடயம் தொடர்பாக ஒரு விசாரனை நடத்தப்படவேண்டும் என்பதுதான் அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. இதற்கு இலங்கை அரசு ஆதரவு அளிக்காதபட்சத்தில் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.