வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார், எருக்கலம்பிட்டி பெண்கள் பாடசாலையில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சினோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சினோபாம் தடுப்பூசியானது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, வவுனியாவிலும் 20 தொடக்கம் 30 வரையானவர்களிற்கான கொரானா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மரைக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவில் உள்ளவர்களிற்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு, கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதற்கிடையில், யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 வயது தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்க்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள், இன்று காலை 8 மணிமுதல் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.