நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது என அறிய முடிகிறது.
அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.
நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது