புலம்பெயர் அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்கள் மீதான தடையினை முதலில் ஜனாதிபதி நீக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதங்கள் பேசி தாங்கள் நினைத்ததை செய்துவிடலாம் என்ற இறுமாப்போடு இருந்த நிலையில், ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்றமை பெரிய விடயமாகும்.
இராஜதந்திர ரீதியாக உள்வாங்கப்பட்டு உள்நுழைவதென்பது பல விடயங்களை சாதகமாக கொண்டுவருவதற்கான சந்தர்ப்பங்களாகும்.
இதேவேளை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழர் விவகாரம் தொடர்பாக அழைப்பு விடுத்தது, இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அதனை உள்விவகாரம் என்று சொல்வது எந்தளவிற்கு சரியானது என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
யுத்தத்தில் தமிழர்களால் இனப்படுகொலை நடந்திருக்கின்றது என்று கூறுகின்ற நிலைமையில் இறந்தவர்களுக்கு மரணப் பத்திரம் வழங்க முடியும் என்று ஜனாதிபதி கூறிய விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ஆனால் பிரச்சினையை தீர்க்கக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்குள் போனதென்ற விடயத்தில் சில சாதகமான விடயங்கள் இருக்கின்றன.
ஆனாலும் அதில் ஆபத்தான விடயங்களும் உள்ளன.ஜனாதிபதி புலம்பெயர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்ததற்கு அப்பால் ஜனாதிபதி இலங்கை அரசாங்கம் ஊடாக பல நாடுகளில் செயற்பட்டுவந்த சில அமைப்புகளுக்கு தடைவித்திக்கப்பட்டிருந்தது.
புலம்பெயர்ந்த சில அமைப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த விவகாரம் எந்தளவுக்கு நியாயமானது. அந்த புலம்பெயர் அமைப்புகளை தமிழர் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு அழைப்பு விடுவது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட விடயமாகவுள்ளது.
ஆகவே, ஜனாதிபதி முதலில் புலம்பெயர்ந்த அமைப்புகள் மீது விதித்துள்ள தடைகளை நீக்குவதன் ஊடாக அந்த அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
மேலும், விடுக்கப்பட்ட அழைப்புகளுக்கு செயல்வடிங்களை அரசாங்கம் கொடுக்கவேண்டும்.
இதேவேளை உள்ளகப்பொறிமுறையென்று கூறும் விடயங்களில் தமிழர்களுக்கு பல கேள்விகள் உள்ளது.
தமிழர்களைப் பொறுத்தரையில் இறுதி இனப்படுகொலை நடைபெற்ற காலப்பகுதியில் இன்றுள்ள ஜனாதிபதியே பல அதிகாரங்களை கொண்டிருந்தார்.
இவ்வாறான ஒருவர், தொடர்ச்சியாக உள்ளகப்பொறிமுறைதான் அமுலுக்கு வரவேண்டும் என்று சொல்வதை தமிழ் மக்கள் நிராகரிக்கின்றார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.