2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது ஆட்டநிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் திருப்தி இல்லை என அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார்.
2011 இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மஹிந்தானந்த அழுத்கமகே அம்பலப்படுத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை அடுத்து மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, உபுல் தரங்க மற்றும் அரவிந்த டி சில்வா உட்பட பல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சிஐடியில் வாக்குமூலம் வழங்கினர்.
இதனை அடுத்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் விசாரணையை மேலும் தொடரத் தேவையில்லை என்றும் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாமல், இந்தப் பிரச்சினை குறித்து முறைப்பாடு வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஆட்டநிர்ணயம் தொடர்பான தகவல்களை வழங்க எவரும் முன்வரமாட்டார்கள் என சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, தனது குற்றச்சாட்டுகள் குறித்து சி.ஐ.டி. உரிய விசாரணை நடத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
இதில் வீரர்கள் சம்பந்தப்பட்டதாக தான் ஒருபோதும் கூறாத நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக, வீரர்களை விசாரிப்பதன் மூலம் சி.ஐ.டி. குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.