சிரியாவில் குர்துப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறுகையில், ‘துருக்கி மீது சிரியாவின் குர்துப் படையினர் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குர்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டனர்.
குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல்லைப் பகுயிலிருந்து அந்த பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்குத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.
அண்மையில் சிரியாவிலிருந்து வீசப்பட்ட பீரங்கி குண்டு துருக்கி எல்லைக்குள் விழுந்து வீடு சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து, குர்துப் படையினர் வீசிய இரண்டு சிறியவகை ஏவுகணைத் தாக்குதலில் 2 துருக்கி பொலிஸார் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா அறிக்கை வெளியிட்டாலும், அதில் உண்மைத்தன்மை இல்லை.
சிரியாவிலிருந்து எங்களது வீரர்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கு அமெரிக்காதான் ஆயுதங்களும் பயிற்சியும் அளிக்கிறது. ஆனால், அவர்கள் நடத்திய தாக்குதலுக்கு உதட்டளவில் கண்டனம் தெரிவிக்கிறது. அமெரிக்கர்கள் தாங்கள் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை இது உறுதி செய்கிறது’ என கூறினார்.
இதையடுத்து, சிரியாவில் துருக்கி மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.