ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் இலக்கை அடைய முடியாவிட்டாலும் இதுவரை எம்மால் 60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும். என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின்கீழ் வீட்டுக்கு வீடு காணி உறுதிப்பத்திம் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு களுதாவளை விச்சுக்காலை வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்
“வருடக்கணக்காக தங்களுக்குப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்த காணி உறுதிகள் அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இப்பொழுது ஆரம்பித்து அதனை வழங்கி வருகின்றோம்.
எமது நாட்டிலுள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் உட்பட சகல சமூகத்தவர்களுக்கும் உரிய பிரதேசங்களுக்குச் சென்று நிரந்தர வதிவிடத்தை உறுதி செய்யும் விதமாக அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொடுக்கும்படி காணி அமைச்சை ஜனாதிபதி ஒப்படைத்த பின்பு அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கமைய திருகோணமலை மாவட்டத்திற்கும் மாலை மட்டக்களப்பு மக்களுக்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றோம்.
காணி ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளுக்கும் அவ்வுரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக கிராமத்திற்கு வந்து வீட்டுக்கு வீடு வந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றோம்.
இவ்வுறுதிப்பத்திரம் வீட்டுக்கு வீடு எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இடம்பெற்று வருகின்றது. இது முன்னர் கச்சேரியில் வைத்து இடம்பெற்று வந்த ஒரு நடைமுறையாகும் ஆனால் அதனை நாம் கிராமத்திற்கு வந்து மக்களின் காலடியில் வைத்து இந்தச் சேவையை வழங்கி வருகின்றோம்.
சகல கிராமங்களுக்கும் என்னால் வரமுடியாவிட்டாலும் அதனை அடையளப்படுத்தும் முகமாக அரசியல் அதிகாரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் உட்பட அனைவரும் கிராமங்களுக்குச் சென்று இதனை வழங்கி வருகின்றோம்.
சுபீட்சத்தின் நோக்கு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதி கூறிய விடயம் 2021ஆம் ஆண்டு எமது நாட்டு மக்களுக்கு ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்க வேண்டும் என்பதேயாகும்
நான் அதனை நடைமுறைப்படுத்தத் தயாராகும்போது எமது காணி ஆணையாளர் நாயகமும் காணி அபிவிருத்தி ஆணைக்குழுவும் தலைவர் அவர்களது ஊழியர் குழாம் ஆகியோர் பணி செய்து வந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியிருந்தது.
அதனால் எமது நில அளவைத் திணைக்களமும் கச்சேரியும் பிரதேச செயலகங்களும் என்று எல்லாமே மூடப்பட்டிருந்தன.
அதன் காரணமாக ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் இலக்கை அடைய முடியாவிட்டாலும் இதுவரை எம்மால் 60 ஆயிரம் காணி உறுதிகள் வழங்க முடிந்திருப்பது ஒரு பாரிய வெற்றியாகும்.” என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.