ஷின்ஜியாங், திபெத், ஹொங்கொங் மற்றும் மங்கோலியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு சீனா பொறுப்புக்கூற வேண்டும் என்பதை ஜப்பான் மற்றும் சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்திற்கு முன்னால் 50 க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தினர்.
‘இனப்படுகொலை ஒலிம்பிக்கிற்கு 100’ நாட்கள் என்ற பதாகையின் கீழேயே ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை நடத்தியிருந்தனர்.
இதன்போது, ஹொங்கொங்கில் சீன அதிகாரிகளால் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுவதை முன்னிலைப்படுத்தியதோடு அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்குமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினர்.
சிறுபான்மை சமூகங்கக்கு எதிரான சீனாவின் செயற்பாடுகள், தைவான் ஜலசந்தியில் ‘ஆபத்தான ஆக்கிரமிப்பு’ இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இதேவேளை, ஜப்பானில் நடைபெற்ற கருத்துக் கணிப்பொன்றில், 90 சதவீதமானவர்கள் சீனா குறித்து எதிர்மறையாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் ஜப்பானின் பொதுத் தேர்தல்களின் போது சீனா குறித்த விடயங்கள் அரசியல் விவாதத்தின் ஒரு பகுதியாக இருப்பதில்லை, இருப்பினும், தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே, சீனாவின் நடவடிக்கைகள் விவாதப்பொருளாகியுள்ளது.
ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் மீண்டும் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த வேறுபாடுகளும் பொதுக் கருத்துகளும் பகிரங்க வெளிக்கு வந்துள்ளன.
இதேவேளை, சீனாவிற்கு வலுவானதொரு செய்தியை அனுப்பும் நோக்கில், ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் இனச் சிறுபான்மை பிராந்தியங்களில் சீனாவின் ‘இனப்படுகொலையை’ விமர்சிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவது பற்றி ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.