ஐக்கிய மக்கள் சக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பான காணொளிகளும் பல ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்கி இன்று பிற்பகல் 02 மணிக்கு கொழும்பு 2 இல் உள்ள ஹைட் பார்க் மைதானத்தில் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பேரணி மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்துவதைத் தடுக்க பொலிஸார் நேற்று நீதிமன்றத்தின் உத்தரவை நாடினர்.
ஏறக்குறைய 31 நீதிமன்றங்கள் போராட்டத்தை தடை செய்ய மறுத்துவிட்டதுடன், சில நீதிமன்றங்கள் திட்டமிட்ட பேரணி மற்றும் எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தன.
போராட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், இது தங்களின் ஜனநாயக உரிமை என தெரிவித்து பேரணி மற்றும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சக்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணித்த பலர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள திடீர் சோதனைச் சாவடிகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சி கேள்வியெழுப்பியதுடன், கொழும்பில் எதிர்க்கட்சிகளால் இன்று நடத்தப்படவிருக்கும் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியே இதுவென்றும் தெரிவிக்கப்படை்டமை குறிப்பிடத்தக்கது.