மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நாளை முதல் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று காலை பாடசாலைக்கு முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
பாடசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தனது தனிப்பட்ட நலனுக்காக ஒரு சிலரை இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளதாகவும் ஆசிரியர்கள் இதன்போது தெரிவித்தனர்.
பாடசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளரே தனிப்பட்ட நலனுக்காக பாடசாலையினை குழப்பாதே,குறித்த சில பெற்றோரிடமிருந்து கல்விசார் ஆளணியினரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து,அரசியல் குப்பைகளை கல்விக்குள் புகுத்தாதே,ஆசிரியர் மீது கைவைக்க யார் அனுமதிதந்தது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குமானால் அதற்காக முறையான விசாரணைகளை நடாத்தி அவருக்கான இடமாற்றத்தினை வழங்கும் வகையான சட்டதிட்டங்கள் இருக்கும்போது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் வீதியிலிறக்க சிலரின் தனிப்பட்ட தேவைக்காக குறித்த போராட்டம் நடாத்தப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஒரு சில பெற்றோரும் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் உட்பட ஒரு சிலரே இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தாகவும் இதன்மூலம் இன்றைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீரழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆசிரியர்களுக்கு எந்தவித அறிவித்தல்களும் வழங்கப்படாமல் பாடசாலையினை மூடி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் உள்செல்ல அனுமதிக்கப்படவில்லையெனவும் மாணவர்கள் உள்செல்ல அனுமதிக்கப்படவில்லையெனவும் ஒரு ஆசிரியருக்காக முழு கல்வி சமூகமும் பாதிக்கப்படும் நிலையினை சிலர் ஏற்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்,அநீதிகளுக்கு எதிரான முறையாக விசாரணை நடாத்தி தீர்வு கிடைக்கும் வரையில் நாளை தொடக்கம் தாங்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.