யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியை, டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்துவதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை, சிரமதானம் செய்யவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பிரதேச மட்டங்களிலும் கிராமிய மட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டங்களை நடத்தி , டெங்கு நுளம்பு கட்டுப்பாடு காலப்பகுதியில் பாடசாலைகள், பொதுஇடங்கள், அலுவலகங்கள், வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமாகாணத்தில் 238பேர் இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றில் யாழ்ப்பாணத்தில் 147பேரும் மன்னாரில் 25பேரும் கிளிநொச்சியில் 25பேரும் முல்லைத்தீவில் 36பேரும் வவுனியாவில் 5பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனாலும், டெங்கு சம்பந்தமாக இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.