தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் பங்கேற்று, கூட்டு ஒப்பந்தத்துக்காக குரல் எழுப்பினர்.
லிந்துலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை மற்றும் ஏனைய சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இ.தொ.காவின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்துடன், தமது உரிய வகையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
” கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரை நாள் பெயர்தான் விழுகின்றது. ஆயிரம் ரூபா கிடைத்தும் பயன் இல்லை. ” என தொழிலாளர்கள் தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.
கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய மக்கள், அந்த ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.