13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
தமிழ் பேசும் கட்சிகளின் முக்கியத்துவமிக்க இரண்டாம் கட்ட சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ரொலோவின் தலைவர் செல்வம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதற்கு முன்னர் இதுபோன்றதொரு சந்திப்பு சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன.
இந்நிலையில், நேற்றைய இரண்டாவது சந்திப்பிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதேநேரம், தேர்தல் முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதை மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.