நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு, நிலையியற் கட்டளைக் குழு, சட்டவாக்க நிலையியற் குழுக்கள் உள்ளிட்ட பல குழுக்கள் செயற்படாமல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழு மற்றும் உயர்மட்டக் குழுக்கள் தொடர்ந்து செயற்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்,
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நிறைவு செய்து கோட்டாபய ராஜபக்ஷவினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டவர்களை நீக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும் ஆளும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களை நியமிப்பதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் முற்றாக பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மாத்திரம் குறித்த தெரிவுக் குழுக்களில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.