தலவாக்கலை, மட்டுகலை பிரதேசத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று, (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தலவாக்கலை பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300இக்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களே பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு, கறுப்பு கொடிகளை பிடித்து, கோஷங்களை எழுப்பியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும், கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் நல்ல கொழுந்து எடுத்து கொடுக்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதன்போது தொழிலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாகவும் ஆகவே கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.