நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்குகூட பாதுகாப்பு இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
தற்கால அரசியல், தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ” நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் இந்நிலைமை மேலும் மோசமாகும். எனவே, தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு ஆட்சியை கைவிட்டு, இந்த அரசு செல்ல வேண்டும்.
நாட்டிலே ஜனநாயகம் இல்லை. அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே இடம்பெறுகின்றன. மக்கள் பிரதிநிதிகளுக்குகூட பாதுகாப்பு இல்லை. ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக்கட்சி உறுப்பினர்களே தாக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.
எனவே, ஆளுங்கட்சிமூலம்தான் இந்த அரசுகூட கவிழ்க்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன். நாட்டில் பல பிரச்சினைகள் தாண்டவமாடும் நிலையில் ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளார். நிதி அமைச்சரும் அமெரிக்கா செல்கின்றார்.
அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எட்டப்பட்டு வர்த்தமானி மூலம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உறுதிப்படுத்தப்பட்டது. பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து இதனை காங்கிரஸினர் கொண்டாடினர்.
வர்த்தமானி மூலம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அதற்கான அழுத்தங்களை அரசில் இருப்பவர்கள் பிரயோகிக்க வேண்டும். அதனைவிடுத்து தற்போது போராட்டங்களை நடத்துவது நாடகமாகும்.”- என்றார்.