ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது என ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் ஸ்தாபகர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “ நெருங்கிய தூரத்தில் இந்தியா இருக்கும் நிலையில் சீனாவின் பார்வை யாழை நோக்கி நகர்ததப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இரண்டு நாடுகளும் முரண்படுகின்றபோது வடக்கு மக்களை பாதிக்கும் ஒரு நிலைமையேற்படும். அந்த நேரத்தில் எமது மக்கள்தான் அழிவிற்கு உட்படும் நிலையில் இருப்பார்கள்.
நாம் இறைமையுள்ள ஒரு இனம். எமது வளங்கள் சுரண்டப்படுவதற்கான அத்திவாரம் இடப்படுவதை நாம் பார்க்கலாம். எமது வளங்களும் அபிவிருத்திகளும் எமது மக்களையே சென்றடையவேண்டும். வெறுமனே இந்த நாடுகள் சுரண்டிச்செல்வதற்கு அனுமதிக்க கூடாது.
எனவே எமது மக்களும் அரசியல் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் விழிப்புணர்வு உடையவர்களாக இருக்கவேண்டும். மேலும் ஒற்றையாட்சிக்குள் வருகின்ற 13ஆவது திருத்தம் எமது மக்களை ஒருபோதும் பாதுகாக்காது.
இதேவேளை 5 வருடங்களாக மாகாண சபையில் இருந்து அதன் அதிகாரத்தை நாம் நன்கு நிரூபித்தோம். இந்த மாகாணசபையில் இருந்து ஒன்றையும் செய்ய முடியவில்லை என்று கூறிய விக்கினேஸ்வரனும் இந்த வட்டத்திற்குள் நிற்பது அக முரண்பாட்டையே ஏற்ப்படுத்தி நிற்கின்றது.
எனவே ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் அதி உட்சபட்ச சுயாட்சி அதிகாரத்தை கோரிநிற்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.