ஒமிக்ரோன் மாறுபாடு உலகளவில் பரவி வருவதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.
ஒமிக்ரோன் மாறுபாடு அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்திவருவதாக சுகாதார நிபுணர்கள் அறிவித்த நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேலும் இந்த இந்த மாறுபாடு, டெல்டாவை விட மிக வேகமாக பரவுகிறது என்பதற்கான ஆதாரம் தற்போது தம்மிடம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.
இதேவேளை கிறிஸ்துமஸ் காலத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் கடுமையான முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.