மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பிரிவின் அபிவிருத்திக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அவுஸ்திரேலியா நாட்டின் தூதுவர் டேவிட் கொலின் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின்போது இலங்கைக்கான அவுஸ்திரேலியா தூதரகத்தின் முதல் செயலாளர் எரிக்கா செய்மோர்,சிரேஸ்ட நிகழ்;ச்சி திட்ட உத்தியோகத்தர் சிவசுதன் மற்றும் யுனிசேப்,அவுஸ்ரேலிய எயிட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.கலாரஞ்சனியுடன் வைத்தியசாலையின் நிலைமைகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் போதனா வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா கடம்பநாதனால் சிறுவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவு அமைப்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது சிறுவர் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் பிரிவிற்கு அமைக்கப்படவுள்ள அவசர சிகிச்சைப்பிரிவுக்கு தேவையான ஒரு கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.