கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் சிந்தனைக்கு அமைவாகவும் அவருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும் சமூகத்தில் பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் தோறும் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முதன் முறையாக மேற்படி கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,உதவி மாவட்ட செயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மகளிர் குழுக்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வடமாகாண ஆளுநருடன் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சந்தித்து மேற்கொண்ட திறந்தவெளி கலந்துரையாடலின்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், குடும்ப வன்முறைகள், பிள்ளைகளை பராமரித்தல், பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆராயப்பட்டன.
அதனடிப்படையிலேயே நேற்றைய கலந்துரையாடலின் ஊடாக மகளிர் குழுக்களின் கருத்துக்களும் பெண்கள் அபிவிருத்தியோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கருத்துகளும் தேவைப்படுகின்றன.
அதனடிப்படையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
அதனடிப்படையில் கலந்துரையாடலில் பங்குபற்றிய பங்குபற்றினர்கள் அனைவரதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
அந்த வகையில் நுண்கடன் பிரச்சினைகள்,வாழ்வாதார உதவிகள், வாழ்வாதாரத்திற்காக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், வீட்டு வன்முறை, இளவயது கர்ப்பம்,சட்டவிரோதமான கருக்கலைப்பு,சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை,சட்டவிரோத மதுபான உற்பத்தி,பாலியல் வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளில் மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்பட கூடிய பிரச்சனைகள் தவிர்ந்த ஏனைய பிரச்சனைகள் கௌரவ ஆளுநர் கெளரவ ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கும் மாகாண மட்டத்தில் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்குமாக இக் கலந்துரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.