மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20வீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் டெங்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சிறுவர்கள்,பெண்கள் டெங்கு தாக்கத்திற்குள்ளாகும் நிலை அதிகரித்துவருவதாகவும் இது இன்னுமொரு அபாயகரமான சூழலை காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் வகையில் புகை விசுறும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட பகுதி மற்றும் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பகுதிகளில் இந்த புகை விசுறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதனின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் இந்த புகை விசுறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்த மாதத்தின் ஆரம்ப வாரத்தில் ஆறு டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் நிலையேற்பட்டுள்ளதனால் பொதுமக்கள் தங்களது சுற்றாடலை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் வேண்டுகோள்விடுத்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையிருந்து டெங்கு அதிகரித்த நிலை ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் படிப்படியாக குறைந்து நவம்பர் மாதம் வரையில் கட்டுப்பாட்டின்கீழ் காணப்பட்டது.
இருந்தபோதும் வடகீழ் பருவபெயர்ச்சி மழையின் பின்னர் கொரனாவினால் முடக்க நிலையிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் டெங்கின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகின்றது.டிசம்பர் மாதம் 10 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தார்கள்.2022ஆம் ஆண்டின் முதல் வாரத்திலேயே ஆறு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றோம்.எமது டெங்கு தடுப்பு குழுவினர் வீடுகள்,காணிகளை சோதனைக்குட்படுத்திய நிலையில் 20வீதமான வீடுகள் டெங்கு நுளம்பு பரவலுக்கு ஏதுவானவகையில் டெங்கு நுளம்பு குடம்பிகளைக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் அடையாளப்படுத்தப்படும் நிலை அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.இது இன்னுமொரு அபாயகரமான சூழலை சுட்டிக்காட்டிநிற்கின்றது.
வீடுகளுக்குள்ளேயும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியார் கல்வி நிலையங்கள்,பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பரவும் இடம் காணப்படலாம் என்ற அபாயத்தினை சுட்டிக்காட்டிநிற்கின்றது.
இதேநேரம் கொரனா அச்சுறுத்தலை தடுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரையும் இதனைப்பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.எமது பிரதேசம் இன்னுமொரு ஆபத்து நிலையினை நோக்கி நகராது இருப்பதற்காக பொதுமக்கள் தங்களது வீடுகள்,காணிகள்,அலுவலகங்கள்,பாடசாலைகள் நீர் தேங்ககூடிய இடங்கள்,நீர் தேங்ககூடிய பாத்திரங்களை அகற்றி டெங்கு பாரிய அபாயகரமானதாக மாறாது உதவிசெய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்.
புத்தாண்டு காலம் என்பதனால் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கடந்த காலத்தில் இவ்வாறான காலப்பகுதிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் மக்கள் மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.