ஜனாதிபதி என்ற ரீதியில் அனைத்து இன மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து ஆற்றிய அக்கிராசன உரையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
மேலும் தனது பதவிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அற்ப அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொது மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையை தவிர்க்குமாறு அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
தேசிய பாதுகாப்பு முழு அளவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் அடுத்து வரும் மூன்று வருடத்தில் இலங்கையை முதலீடுகளின் கேந்திர நிலையமாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு வருவமானம், சுற்றுலாத் துறை, ஆடை தொழில் என்பன பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக பாரிய செலவீனங்கள் ஏற்பட்டபோதும் இன்று சாதாரண வாழ்கையை மீளப் பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தனக்கு வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, அனைவரும் இன, மத பேதங்களை கடந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதேநேரம் பசுமை விவசாயத்திற்கான அரசாங்கத்தின் கொள்கையில் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.