யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளான நிலையில் , அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை – மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் யாழில் இருந்து வேகமாக பயணித்த குறித்த வாகனம் மாம்பழம் சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதி தடம்புரண்டது.
அதனை அடுத்து அவ்விடத்தில் கூடியவர்கள் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்டெடுத்தனர். அவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் முதலில் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியில் இருந்த வைத்தியர்கள் என அடையாளப்படுத்தும் ஸ்ரிக்கரை கிழித்ததாக அங்கிருந் தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் வாகனத்தினுள் யாழில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் பெறப்பட்ட உணவு பொதிகளும் காணப்பட்டுள்ளன. அதனால் விபத்துக்கு உள்ளானவர்கள் தனியார் விருந்தினர் விடுதியில் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர்.
அதேவேளை பின்னர் வாகனத்துடன் அங்கிருந்து விபத்துக்கு உள்ளானவர்கள் செல்ல முற்பட்ட போது , அங்கிருந்தவர்கள் அதற்கு அனுமதிக்காது பொலிஸாருக்கு அறிவித்தனர்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , விபத்துக்கு உள்ளான வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.