கிடைக்காத விடயம் ஒன்றினை பெறுவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சில அரசியல்வாதிகள் இங்குள்ள இளைஞர் யுவதிகளை பிழையாக வழி நடத்துகிறார்கள்.
கிடைக்காது என தெரிந்து கொண்டும் அதனை பெற முயற்சிக்கிறோம் என இளைஞர்களை மக்களை தூண்டி விடுகிறார்கள். அது சாத்தியமல்லாத விடயம்.
எத்தனை இளைஞர் யுவதிகளை இவ்வாறான அரசியல்வாதிகள் போராட்டத்தின் மூலம் இழந்து விட்டோம். எத்தனை இளைஞர் யுவதிகள் வடக்கில் தமது எதிர்காலத்தை இழந்து விட்டார்கள்.
வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகின்றேன். உங்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள்.
உங்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. உங்களுக்கு முன்னால் உலகம் உள்ளது. உலகத்தை நோக்கி உற்றுப்பாருங்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு பின்னால் செல்லாதீர்கள்.
அத்தோடு இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினார்கள். அவ்வாறு அனுப்புவதன் மூலம் ஒரு நாடு கிடைத்துவிடுமா?
ஏற்கனவே 13 ஆம் திருத்தச் சட்டம் இங்கே நடைமுறையில் உள்ளது. அதனை நாங்கள் பேசி அதனை நடைமுறைப் படுத்துமாறு கோரினால் அது சாத்தியப்படும். அதை விடுத்து நாங்கள் கடிதம் அனுப்புவதன் மூலம் அது நடைபெறாது.
அத்தோடு நானும் வெளிவிவகார அமைச்சரும் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி அவர்களுடன் தமிழ் பேசும் அனைத்து கட்சியினரையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய உள்ளோம்.
அவ்வாறான சந்திப்புகள் மூலம் இங்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பேசி அதற்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நான் யாழ்.சிறைச்சாலைக்கு சென்ற போது அங்கே போதைப்பொருள் தொடர்பான வழக்குடன் சம்பந்தப்பட்டோரே பலர் கைதிகளாக உள்ளார்கள்.
வடக்கில் இந்த போதைப் பொருளை தடுத்து நிறுத்துவதற்கான வேலைத்திட்டம் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நான் யோசித்து இருக்கின்றேன்.
குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை ஆரம்பித்து, அந்த புனர்வாழ்வு நிலையத்தில் ஊடாக போதைக்கு அடிமையானோருக்கு விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு அளிப்பதன் மூலம் வடக்கில் இந்த போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்.
வடக்கில் காணி பிரச்சினை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இந்த விடயத்தினை நாங்கள் கட்டாயம் ஜனாதிபதிக்கு தெரிவித்து அதற்கு என்ன செய்யலாம் என்ற விடயம் தொடர்பில் நான் ஆராய்வேன்.“ என தெரிவித்துள்ளார்.