மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும் நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்கான எரிபொருள் (டீசல்) தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடையை மேற்கொண்டு வருகின்ற விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை அதி கூடிய விவசாய பிரதேசமாக காணப்படும் நானாட்டான் மற்றும் முருங்கன் பகுதிகளிலும் தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அறுவடைக்கு தேவையான உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்றவற்றிற்கான எரிபொருள் (டீசல்); தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நானாட்டானில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக நானாட்டான், முசலி பிரதேச விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியிலிருந்து டீசலை பெற்றுக் கொள்ள கேன்களுடன் வரிசையில் காத்து நின்றுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சில இடங்களில் அறுவடைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தாலும் நானாட்டான் போன்ற பல பகுதிகளில் தற்போது அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அறுவடையின் போது உழவு இயந்திரம் அறுவடை இயந்திரம் போன்றவற்றிற்கு தேவையான டீசலை பெற்றுக் கொள்வதற்காக அதிகாலையில் இருந்து வரிசையில் நிற்கிறோம்.
ஏற்கனவே உரம் மற்றும் கிருமி நாசினிகள் தட்டுப்பாட்டினால் எங்களிடம் கிடைத்த வளங்களை வைத்து இந்த விவசாயத்தை மேற்கொண்டு தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இவ்வாறு டீசல் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றோம்.
இதனால் எமக்கு மீண்டும் மீண்டும் இழப்புகள் ஏற்படும்.எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடையில்லாமல் டீசல் எரிபொருள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.இல்லை என்றால் மிகவும் கஷ்டத்தில் உள்ள விவசாயிகள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடும்.
இங்கு வரிசையில் வைக்கப்பட்டுள்ள கேன்களை பார்க்கும்போது தற்போது 5 பவுசரில் டீசல் வந்தாலும் காணாது.
இந்த செயற்பாடுகளால் ஒரு சில நாட்களில் அறுவடை செய்ய உள்ள விளைநிலங்கள் பாதிக்கும்.
எனவே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இதற்கான முடிவை உடனடியாக எடுத்து விவசாய அறுவடை நடவடிக்கைகளுக்கு தடையில்லாத டீசல் எரி பொருட்களை வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விவசாயிகளும் எரிபொருளை பெற்றுக் கொள்ள வருகை தந்து நீண்ட நேரத்தின் பின் எரிபொருள் இன்றி ஏமாற்றத்துடன் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.