தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
மேலும், டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் என்றும் எதிர்வரும் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் மருந்து, எரிபொருள், தொழில்துறை பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த வருடம் 21 பில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டபோதும் அதில் எரிபொருளை இறக்குமதிக்கு 2.8 பில்லியன் டொலர்களே செலவிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.