பயங்கரவாத தடைச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதன் பிரகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
இதேவேளை இலங்கையின் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தவும், கடந்த கால நிகழ்வுகளை மீட்பதன் காரணமாக வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது என்றும் குற்றம் சாட்டினார்.
ஆகவே தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சாட்சியம் சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உறுப்பு நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் நிதியை இதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பொறிமுறையானது மக்களின் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் அல்லது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்காது எனவும் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.