இலங்கை சாரணர் இயக்கத்தின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கொடி தினத்தின் முதலாவது கொடி இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி தலைமை ஆணையாளர் நிர்மலி வில்லியம் அவர்களினால் இன்று (திங்கட்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
இதன்போது சாரணர் இயக்கத்தின் வரலாறு குறித்து எழுதப்பட்ட நூலொன்று இலங்கை சாரணர் இயக்கத்தின் தொடர்பாடல் ஆணையாளர் ருக்ஷானி அஸீஸ் அவர்களினால் ரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சாரணர் இயக்கத்தின் நிறுவனரான ரொபர்ட் ஸ்டீவன்சன் ஸ்மித் பேடன்-பவேலின் சகோதரியான மிஸ் ஆலிவ் பேடன்-பவேல் தலைமையில் 1910 ஆம் ஆண்டு சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டது.
140 நாடுகளைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய தன்னார்வப் பெண்கள் அமைப்பான உலக சாரணர் சங்கத்தில் இலங்கை 1917ஆம் ஆண்டு மார்ச் 21 அங்கத்துவம் பெற்றது.
கண்டி பெண்கள் உயர்நிலைப் பர்சாலையின் அதிபராக இருந்த சான்சன் அவர்களின் முயற்சியின் பலனாக ஜென்னி கால்வர்லி அவர்களின் தலைமையில் இது நடைபெற்றது.
தற்போது இலங்கை சாரணர் இயக்கத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் 70,000 சாரணர்கள் இணைந்திருப்பதுடன் விசேட தேவையுடைய சாரணர் குழுவும் அவர்களுள் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சர்வதேச சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் நதீகா குணசேகர, இலங்கை சாரணர் இயக்கத்தின் உதவி பிரதம ஆணையாளர் நிர்மலி வில்லியம் மற்றும் பல்வேறு வயது பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.