மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவினை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அண்மைக்காலமான மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினடிப்படையில் ஒரு முறை அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.இதன்போது அது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.நாங்கள் அப்பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தோம்.
இது தொடர்பில் காத்தான்குடி நகரசபை தவிசாளருக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தோம்.சட்டதிட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் என அதில் நாங்கள் தெரிவித்திருந்தோம்.ஆனால் அதற்கு எந்தவிதமான பதில்களும் வழங்கப்படவில்லை.அவர் தனது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர்,கிழக்கு மாகாண ஆளுனர்,உரிய அமைச்சுகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம்.
2017ஆம்ஆண்டின் சுற்றறிக்கையின் பிரகாரம் மாநகரசபையின் எல்லை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரசபையின் எல்லைகளை நினைத்தவாறு மாற்றமுடியாது.இருந்தபோதிலும் பிழையான தகவல்களை வைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை காத்தான்குடி தவிசாளர் முன்னெடுப்பது என்பது ஒரு இன முறுகலை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாகவே நான் கருதுகின்றேன்.
தற்போதைய காலத்தில் இரு இனங்களும் ஒன்றாக இணைந்து எமது உரிமைகளை,தேவைகளை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுவரும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான இனமுரண்பாடுகளை ஏற்படுத்தி மீண்டும் பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக இதனை கருதவேண்டியுள்ளது.
நேற்றும் பள்ளிவாயல்கள் ஊடாக காத்தான்குடி நகரசபையில் வரிகளை செலுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன்.
உடனடியாக அப்பகுதிக்கு சென்று வரிகளை அறிவீடு செய்யவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பணித்துள்ளேன்.மேலும் இந்த அறிவுறுத்தல்களை வழங்கிய பள்ளிவாயல்களுக்கு குறித்த அறிவிப்பு தொடர்பில் விளக்கம்கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இதற்கு மேலாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரி அறிவீடு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளது என்ற அடிப்படையில் காத்தான்குடி தவிசாளருக்கு எதிராகவும் அறிவிப்பு செய்த பள்ளிவாயல்களுக்கு எதிராகவும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த எல்லைப்பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபை உத்தியோகத்தர்களை வரிஅறவீடு செயற்பாடுகளை தீவிரப்படுத்துமாறும் பணித்திருக்கிறேன்.ஆணையாளர் மிக விரைவாக அதனை செய்வார் என நம்புகின்றேன்.