மலையகத்தில் தற்போது நிலவிவரும் வறட்சியான காலநிலையினால், நீர்த்தேக்கங்களில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன மீண்டும் தோற்றம் பெற்றுள்ளன.
இந்த வறட்சி மின்சாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும், குறித்த இடங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா விரும்பிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வரை 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் வறட்சியான காலநிலையினையடுத்து மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 சதவீதம் நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாகவும், கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 சதவீதமும், விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 சதவீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 சதவீதமும், சமனலவென 14.6 சதவீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.