ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசல் தீர்ந்து போனதால் வாகன சாரதிகள் ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொது போக்குவரத்து சுமார் 1 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்டது.
அட்டன் நகரத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் நேற்று பகல் முதல் வரிசையில் காத்திருந்தனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து டீசல் முடிவடைந்ததாக அறிவித்ததனை தொடர்ந்து அட்டன் கொழும்பு பிரதான வீதியினை அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.45 மணியளவில் மறித்து சுமார் 8.15 வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
டீசல் பெற்றுக்கொள்வதற்காக உணவின்றி நின்று கொண்டிருப்பதாகவும், தற்போது டீசல் இல்லையென தெரிவிப்பதாகவும் நாளை டீசல் பெற்றுக்கொள்ள வந்தால் மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும் அரச பஸ்களுக்கு மாத்திரம் டீசலினை பெற்றுக்கொடுப்பதாகவும் ஏனையவர்கள் எவ்வாறு வாழ்வது எனவே டீசல் பெற்றுக்கொடுக்கும் வரை தாங்கள் வீதியினை மறித்து போராடுவதாகவும் தெரிவித்தனர்.
செல்வந்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக டீசலினை வைத்து கொள்வதாகவும் இதனால் ஏழை மக்கள் மாத்திரம் பாதிப்புக்குள்ளாவதாகவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த போராட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை நடைபெற்றது. இதனால் பயணிகள் மற்றும் வீடுகளுக்கு செல்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அதனை தொடர்ந்து அட்டன் பொலிஸார் கொட்டகலை எரிபொருள் விநியோகிக்கும் பெற்றோல் கூட்டுத்தாபனத்துடன் தொலைப்பேசி மூலம் கலந்துரையாடி டீசல் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்ததனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.