நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய சமிந்த குலரத்னவின் பணி இடைநீக்கம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (27) கருத்துத் தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்பில் தனிநபர் விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவருக்காக எதிர்க்கட்சியின் முதன்மை அமைப்பாளர் அந்த தீர்மானத்தை எடுத்த குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, கடந்த ஆண்டின் (2025) ஆகஸ்ட் 19ஆம் திகதி இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரியொருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அந்தத் தனிநபர் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தவறான தகவல்களை முன்வைத்து நாடாளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நியமனத்தைப் பெற்றுக்கொண்டமை, அந்தப் பதவிகளில் சேவையை நிரந்தரமாக்கிக் கொண்டமை, தனக்கு உரிமையில்லாத சம்பளப் பலன்களைப் பெற்றுக்கொண்டமை ஆகியவற்றின் ஊடாக பொதுச் சேவை விதிமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டு முறையற்ற அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டமை மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.












