இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது (27) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது. இது இலங்கையில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.
போட்டியில் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய ஜோ ரூட், தனது 20-வது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 111 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட உயர்வுக்கு அடித்தளமிட்டார்.
இங்கிலாந்து அணித் தலைவர் ஹாரி ப்ரூக் மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினார். வெறும் 57 பந்துகளில் சதம் விளாசிய அவர், 137 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது அவரது 3-வது ஒருநாள் சதமாகும்.
இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
இங்கிலாந்து அணி தனது துடுப்பாட்ட வரிசையில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹமதுவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது. அவர் 24 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்தத் திணறினர். வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும், ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தற்போது இலங்கை அணி வெற்றிபெற 358 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாட உள்ளது.
















