உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
கடந்த போட்டியில் விளையாடிய கமில் மிஷாரவுக்கு பதிலாக சரித் அசலங்க போட்டியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரச்சின் ரவிந்திரா 32 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது ஆடுகளம் புகுந்த அணித் தலைவர் மிட்செல் சென்ட்னர் மற்றும் கோல் மெக்கொன்சி ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி நியூசிலாந்து அணிக்கு வலுசேர்த்தனர்.
மிட்செல் சென்ட்னர் 26 பந்துகளில் 47 ஓட்டங்களையும், கோல் மெக்கொன்சி 23 வந்துகளில் 31 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஸன மற்றும், துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

















