எஸ். ஹரியதர்ஷனி
ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு “பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது” என பிரதமர் அன்டி பே(ர்)னாம் தெரிவித்துள்ளார் .
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் கெமி பேடனோச் ( Kemi Badenoch ) கேள்வி எழுப்பிய நிலையில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
கடந்த வாரம் பிரஸ்ஸல்ஸில் ( Brussels ) நடந்த உச்சிமாநாட்டில், உணவு மற்றும் விவசாய ஏற்றுமதி, புகை உமிழ்வு வர்த்தகம் மற்றும் இளைஞர் அனுபவத் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை பிரதமர் உறுதி செய்தார்.
இருப்பினும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயிலும் ஐரோப்பியர்களுக்கான கல்விக் கட்டணம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தங்கள் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும், வணிகங்களுக்கான “ஏராளமான தேவையற்ற கட்டுப்பாடுகளை” அகற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை கல்விக் கட்டணப் பிரச்சினை முடிவுக்கு வரும் வரை இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் தொடருமா என்பது குறித்து எதிர்கட்சித் தலைவர் கெமி பேடனோச் ( Kemi Badenoch ) கேள்வி எழுப்பினார்.
இந்த ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது எனவும் ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் கூறிய கருத்துக்களை பிரதமரால் எளிதில் புறக்கணிக்க முடியாது. மேலும், கல்விக் கட்டணங்கள் தொடர்பாக பிரதமர் என்ன செய்கிறார் என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்” எனவும் கெமி பேடனோச் சுட்டிக்காட்டியுள்ளார்.













