தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான சூர்யா மற்றும் நயன்தாரா ஆகியோரின் திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
இவ்விரு திரைப்படங்களின் முதல் நாள் வசூல் விபரங்களை இந்திய ஊடகங்கள் வௌியிட்டுள்ளன.
‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில், சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் நேற்றைய தினம் (6) வெளியானது.
சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சூர்யா தனது ‘ழகரம்’ மற்றும் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனங்கள் மூலம் தயாரித்துள்ளார்.
காமெடி மற்றும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இத்திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் 34.25 கோடி இந்திய ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்திய அளவில் 20 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமாக வசூலித்துள்ள இத்திரைப்படம், நடப்பாண்டில் சூர்யாவுக்கு மேலும் ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம், நடிகை நயன்தாரா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படமும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது.
எனினும், கடுமையான போட்டிக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் 1.88 கோடி ரூபாயை (உலகளவில் சுமார் 2.22 கோடி இந்திய ரூபாய்) மட்டுமே வசூலித்துள்ளதாக பொக்ஸ் ஒஃபிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, இந்த தீபாவளி மோதலில் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வசூல் ரீதியாகப் பலமான முன்னிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















