அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணையவழியில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு பிரதேச செயலக மட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்ட தகுதியான பயனாளர்களின் பட்டியல் கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக இன்று (11) அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் திகதி வரை 143,805 மேன்முறையீடுகளும், 6,478 பொதுமக்களின் ஆட்சேபனைகளும் இணையவழி கட்டமைப்பில் பதிவாகியுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2002ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆவது பிரிவுக்கு அமைவாக, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தச் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் தமது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை https://eservices.wbb.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும்.
மேலும், இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப உதவி தேவைப்படுவோர் தத்தமது பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவை அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு 1924 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.














