முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்ற பயணம் தொடர்பாக 16.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.














