ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அஜ்மானில் அமைந்துள்ள கர்வான் ஸ்போர்ட்ஸ் கழத்தில் இன்று (25) நடைபெற்ற போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை அணி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத்தை (ICC Women’s Emerging Nations Trophy) வென்றது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த அயர்லாந்து அணி, தொடக்கத்திலிருந்தே சரிவை சந்தித்த நிலையில் அதிலிருந்து மீள முடியாது திணறியது.
இறுதியில் அந்த அணி,19.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அணித் தலைவி கேபி லூயிஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க (அணி எண்ணிக்கை 5/1), அயர்லாந்து அணி 10/2 என்ற நிலைக்குச் சரிந்தது.
தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 12 ஓவர்களுக்குள் 54/6 என்ற மோசமான நிலையை எட்டியது.
அயர்லாந்து அணியில் அலானா டால்செல் அதிகபட்சமாக 25 பந்துகளில் 24 ஓட்டங்கள் (ஒரு பவுண்டரி) எடுத்தார்.
லூயிஸ் லிட்டில் (17 பந்துகளில் 15 ஓட்டங்கள், இரண்டு பவுண்டரிகள்) மற்றும் ஜோர்ஜினா டெம்ப்சீ (13 பந்துகளில் 13 ஓட்டங்கள், இரண்டு பவுண்டரிகள்) ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.
இலங்கை அணி சார்பில் சத்யா சந்தீபனி, நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கையின் மிகச்சிறந்த பந்துவீச்சுக்குத் தலைமை தாங்கினார்.
இவருக்கு உறுதுணையாக கவிஷா தில்ஹாரி (1/16) மற்றும் சுகந்திகா குமாரி (1/19) ஆகியோர் கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
நிமாஷா மீபேகே (1/21) மற்றும் சேதன விமுக்தி (1/24) ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
களத்தடுப்பில் காட்டிய துடிப்பும், குறிப்பாக இரண்டு ரன்-அவுட்களும், அயர்லாந்தின் பின்வரிசை துடுப்பாட வீரர்கள் சவாலான ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்குத் தடையாக அமைந்தன.
சாம்பியன் பட்டத்திற்காக 97 ஓட்டங்களைத் துரத்திய இலங்கை, ஆரம்பத்தில் விறுவிறுப்பாக முன்னேறியது.
பின்னர், அடுத்தடுத்த பந்துகளில் சஞ்சனா கவிண்டி (22 பந்துகளில் 25 ஓட்டம், நான்கு பவுண்டரிகள்) மற்றும் அணித் தலைவி ஹர்ஷிதா சமரவிக்ரம (0) ஆகியோரை இழந்ததால், அணி 35/2 என்ற நிலையில் இருந்தது.
கியா மெக்கார்ட்னி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் (2/16) மற்றும் காரா முர்ரே 2/38 என்ற பந்துவீச்சை வெளிப்படுத்த, ஒன்பதாவது ஓவரில் இலங்கை 69/4 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, அயர்லாந்து அணி சிறிது நேரம் போட்டியில் நீடித்தது.
இருப்பினும், இமேஷா துலானி 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள் எடுத்து, நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி, தீர்க்கமான எதிர் தாக்குதலைத் தொடுத்தார்.
துலானி, கவிஷா திலஹாரியுடன் (10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்கள்; இரண்டு பவுண்டரிகள்) இணைந்து ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களைச் சேர்த்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 12.4 ஓவர்களிலேயே 99/4 என்ற நிலையை எட்டி, கிண்ணத்தை மிகச் சிறப்பாகக் கைப்பற்றியது.
இந்த வெற்றி, இத்தொடரின் இரண்டாவது சீசனில் ஒரு சிறப்பான பயணத்தை நிறைவு செய்துள்ளது.
2025-ல் நடைபெற்ற முதல் சீசனில் வெற்றி பெற்றிருந்த தாய்லாந்திற்குப் பதிலாக, தற்போது இலங்கை வெற்றி பெற்றுள்ளது.















